வீட்டுமனை வாங்கியதும் அளவீடு செய்வது அவசியம்
- அளவீடு செய்ய வேண்டும்
- பிரச்சினையை சந்திக்க நேரும்
- வீட்டை இடிக்கும் நிலை
- வீண் விரயம்
வீட்டுமனை வாங்குபவர்கள் அந்த மனை மீது எந்த வில்லங்கமும் இல்லை என்பதை உறுதி செய்தப்பின் ஆவண சரிபார்ப்புக்கு அதிக கவனம் செலுத்துகிறார்கள். அத்துடன் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் ஒன்றும் இருக்கிறது. அது வாங்கும் மனைகளை அளவீடு செய்வதாகும். அதிலும் ஒரே இடத்தில் பல வீட்டுமனைகள் பிரிக்கப்பட்டு இருந்தால் கவனமாக செயல்பட வேண்டும்.
அளவீடு செய்ய வேண்டும்
அந்த மனைகள் அடுத்தடுத்து அமைக்கப்பட்டிருக்கும் என்பதால் தங்கள் மனை பற்றிய விவரங்களை சரி பார்ப்பது அவசியம். ஒவ்வொரு மனையையும் தனித்தனியாக குறிப்பிடும் விதத்தில் நான்கு புறமும் எல்லைக் கற்கள் நடவு செய்யப்பட்டிருக்கிறதா? என்பதை மட்டும் பார்த்து திருப்தி அடைந்துவிடக்கூடாது.
அந்த எல்லை அளவுகள் சரிதானா? என்பதை உறுதி செய்வது அவசியம். அதற்கு மனை வாங்கும்போதே அதன் நீளம், அகலம் சரியாக இருக்கிறதா? என்று சரிபார்க்க வேண்டும். முக்கியமாக சர்வேயர் மூலம் நிலத்தை அளவீடு செய்ய வேண்டும். மேலும் அந்த மனை குறித்த சர்வே எண்ணும் சரியாக இருக்கிறதா? என்பதையும் கவனிக்க வேண்டும்.
பிரச்சினையை சந்திக்க நேரும்
ஏனெனில் அடுத்தடுத்து மனைப்பிரிவுகள் அமைந்திருக்கும் பட்சத்தில் அதன் நீளம், அகலம் சரியாக இல்லாவிட்டால் அது அடுத்தவருடைய இடமாக இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம். வீட்டுமனை வாங்குபவர்களில் பெரும்பாலானோர் ஆவணங்களை சரிபார்ப்பதற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை நில அளவீடு செய்வதற்கு கொடுப்பதில்லை. தான் வாங்கிய வீட்டுமனை முறைப்படி அளக்கப்பட்டு எல்லைகள் குறிக்கப்பட்டு இருப்பதாக நினைத்து விடுகிறார்கள்.
மனைப்பிரிவை உருவாக்குபவர்கள் துல்லியமாக நிலத்தை அளவீடு செய்து எல்லைக்கற்களை நடவு செய்திருந்தால் பிரச்சினை இல்லை. அப்படி இல்லாதபட்சத்தில் பிரச்சினைகள் பல வகைகளில் தலைதூக்கும். சிலர் தன்னுடைய இடம் என்று நினைத்து பக்கத்து மனையில் தங்களது கட்டுமானங்களை அமைத்து விடுவார்கள்.
வீட்டை இடிக்கும் நிலை
குறிப்பாக வீட்டின் பக்கவாட்டு சுவர்களை எழுப்பிவிடுவார்கள். பக்கத்து மனையை வாங்கியவர் தனது மனையை அளவீடு செய்யும்போதோ, கட்டுமான பணியை தொடங்கும்போதோ தான் இந்த பிரச்சினை வெளிப்படும். இருவருக்கும் இடையே பேச்சுவார்த்தையில் சுமுக தீர்வு எட்டப்பட்டால் சிக்கல் இல்லை.
அதிலும் அடுத்தவர் சர்வே எண் அமைந்த பகுதியில் அதிக இடத்தை ஆக்கிரமித்து வீட்டை கட்டி விட்டால் பல்வேறு பிரச்சினைகளை சந்திக்க வேண்டிவரும். அந்த இடம் அவருக்கு சொந்தமானதாக இருப்பதால் கட்டிய வீட்டை இடிக்கும் நிலை ஏற்படும். அல்லது தம்முடைய இடத்தை அவருக்கு கொடுக்க வேண்டிய வரும். அதற்கு அவர் ஒப்புக்கொண்டால் பிரச்சினை இல்லை.
வீண் விரயம்
எனினும் இடத்தை அவர் பெயரில் மாற்றுவதற்கு பத்திர செலவு செய்ய வேண்டியதிருக்கும். தேவையில்லாத மனக்கஷ்டத்தையும், அலைச்சலையும் சந்திக்க வேண்டியிருக்கும். அதே நேரத்தில் அவர் தன்னுடைய இடம்தான் தனக்கு வேண்டும் என்று பிடிவாதம் செய்தால் வீட்டை இடிப்பதை தவிர வேறு வழி இல்லாத நிலை ஏற்படும். எனவே வீட்டுமனை வாங்கும்போதே அதன் நீளம், அகலம், நான்கு புற எல்லைகளை அளவீடு செய்து சரி பார்த்துக் கொள்வது அவசியம்.
ஆதாரம் : டெய்லி தந்தி
Loading...
No comments:
Post a Comment